--- --:--:-- --

திமுக இதுவரை அழைக்கவில்லை… 3வது அணியில் மதிமுக? வைகோ விளக்கம்!

vaiko 01

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த திமுக தரப்பில் இருந்து மீண்டும் அழைப்பு வரவில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மமக, இ.யூ.முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக தரப்பில் மிகக்குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகக்கூறி, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிக்கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

 

தொகுதி எண்ணிக்கை தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே ஆலோசனை நடத்துகின்றன.

 

இச்சூழலில், தொகுதிப்பங்கீடு விஷயத்தில், தி.மு.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், நேற்று நடந்த 2-ம் சுற்று பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை; மதிமுக தலைவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர்.

 

இதற்கிடையே, திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மதிமுக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது.

 

அதன் பின்னர், நிருபர்களிடம் வைகோ கூறுகையில், சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதிகளை பங்கிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.

 

திமுக, இன்னமும் 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு மதிமுகவை அழைக்கவில்லை என்று கூறிய வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கவுரவமாக நடத்தியுள்ளது. தேர்தலில் 3-வது அணி அமைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணிக்கு மதிமுக செல்லாது என்றார்.

 

வைகோவின் இந்த அறிவிப்பின் மூலம், திமுக தரப்பில் வழங்கப்படும் தொகுதிகளை ஏற்றுக் கொண்டு அந்த கூட்டணியிலேயே மதிமுக தொடர்வது உறுதியாகி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon