--- --:--:-- --

“ரேசன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாய கொரோனா சோதனை”!! தமிழக அரசு உத்தரவு!!

RATION

ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த மார்ச் மாதம் முதல் ரேசன் கடை ஊழியர்கள் விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். கொரோனா நிவாரணமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் ரேசன் கடைகளில் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படுகிறது. எத்தனை கட்டுப்பாடுகள், அறிவுரை கூறினாலும் இதனை வாங்க குவியும் மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விடுகின்றனர்.

 

இதனால் ரேசன் கடை ஊழியர்கள் கொரோனா அச்சத்துடனேயே பணிசெய்வதுடன், தங்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தொடர்ந்து அபயக்குரல் எழுப்பி வருகின்றனர்.

 

இந்நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

 

மேலும், பிற பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் ஊழியர்களுக்கு போதுமான முகக்கவசம், கையுறை, சானிடைசர் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon