திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் முதல் கட்டமாக மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது..!
திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக நடந்த சுத்தபடுத்தும் பணிக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரத்னா முன்னிலை வகித்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் முத்தமிழ் செல்வன், அய்யப்பன், சஃபியுல்லா, பிரமுஅம்மாள், சுதா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் அம்பலவாணன், சாந்தி, பள்ளி வாட்ச்மேன் ஆறுமுகம் மற்றும் ஜெய்வாபாய் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவி சஷ்டிகா தேவி, தன்னார்வலர்கள் ஆனந்த், பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளியின் நுழைவாயிலின் வலது பக்கம் உள்ள தோட்டப்பகுதிகளை சுத்தம் செய்தனர்.
அப்போது அங்கு இருந்த பழைய மர மற்றும் தேவையற்ற பொருட்களை சுத்தம் செய்து வேறு பகுதியில் அடுக்கி வைத்தனர். பின்னர் அங்கிருந்த சிறு சிறு தோட்டத்தில் இருந்த உள்ள குப்பைகளை அகற்றி வெளியேற்றினர். தொடர்ந்து துளசி உள்பட மூலிகை செடிகள் நடப்பட்டு. அனைத்து மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினர். கூட்ட அழைப்பாளர் மற்றும் பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி மேற்பார்வையில் காலை 7 மணிக்கு ஆரம்பித்த சுத்தப்படுத்தும் பணி 10 மணி வரை நீடித்தது.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரி கூறுகையில் நமது குழந்தை படிக்கும் பள்ளி நமது பள்ளி என்ற கொள்கையின் அடிப்படையில் நாங்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும், தன்னார்வலர்களும் எங்களுடன் இணைந்து இந்த சமூக சேவை பணியை மேற்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்த பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.





