தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு 3,500 ரூபாய் பெற்றுக்கொண்டு சென்னைக்கு ஆட்களை கொண்டு சென்ற 3 பேர் கைது!
இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருச்செந்தூர், இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவ சுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்திரன் (42), உடன்குடி, சிறுநாடார் குடியிருப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தரலிங்கம்(40), இவர்கள் இரவு சுமார் 9 மணி அளவில் உடங்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர். அப்போது திருச்செந்துர் காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு வந்ததுள்ளனர்.
அந்த வழியாக TN 09 AT 3505 என்ற நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரின் உரிமையாளரிடம் காவலர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். அக்கேள்விக்கு முன்னுக்கு முரணான பதிலை அவர்கள் கூறியுள்ளனர். சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் வாகனம் மூலம் தலா ரூபாய் 3500/- பெற்றுக் கொண்டு 5 நபர்களை சென்னைக்கு பாஸ் இல்லாமல் கொண்டு சேர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு சென்னை செல்வதாகவும் அங்கிருந்து திருமணத்திற்காக ஆந்திரா செல்வதாகவும் கூறியுள்ளனர்.இது சம்மந்தமாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் இதை கடந்த சில தினங்களாகவே ஊரடங்கு நேரத்தில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் பெற்று கொண்டு தொழிலாகவே செய்து வந்தது தெரிய வந்தது.
விழிப்புடன் செயல்பட்ட திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.







