காரமடை அரங்கநாத சுவாமி மாசி மகத் தேர்த்திருவிழா…! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!!
காரமடை அரங்கநாத சுவாமி மாசி மகத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாவட்டம் காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அரங்கதாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் திருமுனை நகர சோதனை என்ற கிராம சாந்தி நடைபெற்றது.இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு அரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சன பூஜை நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி,பூதேவி,பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது.
திருமலை நல்லான் சக்கரவர்த்தி சுவாமிகள்,வேத வியாசர் சுதர்சன பட்டர் சுவாமிகள்,ஸ்ரீதர் பட்டர் சுவாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியினை வேத மந்திரங்கள் ஓத சிறப்பு வழிபாடு நடைபெற்று பின்னர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.பின்னர்,கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.இதனை கண்ட பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷமிட்டது விண்ணை அதிரச்செய்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.அதனை முன்னிட்டு அரங்கநாத பெருமாள்,சீதேவி,பூதேவி சமேதராய் திருத்தேருக்கு எழுந்தருளினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ்,மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாதனை தரிசனம் செய்தனர்.பின்னர்,திருத்தேரானது நான்கு மாட வீதிகளில் வலம் வந்து நிலையினை அடைந்தது.அப்போது,கோவிந்தா,கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும்,உதவி ஆணையருமான விமலா,செயல் அலுவலர் மருது பாண்டியன்,கோவில் கணக்காளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி மணி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும்,போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.





