டி 20 பெண்கள் உலகக் கோப்பை: 5-வது முறையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா…! இந்தியா பரிதாபம்!!
டி20 பெண்கள் உலகக் கோப்பையை 5-வது முறையாக கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதித்தது. முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, ஆஸி., முன் சரணாகதி அடைந்து 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
7-வது டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணியை, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி சந்தித்தது. சர்வதேச மகளிர் தினத்தில் டி20 பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றதால், உலகின் பிரம்மாண்ட மெல்போர்ன் மைதானத்தில் போட்டியைக் காண 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இதில் பெண்கள் தான் மிகவும் அதிகம் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹீலி, மூன்னே இருவரும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர்.39 பந்துகளில் 75 ரன்களை ( 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய ஹீலி அவுட்டானார். மூன்னே கடைசி வரை அவுட்டாகாமல் 54 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆஸி., அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. டி20 பெண்கள் உலகக் கோப்பையில் இது தான் அதிகபட்ச ஸ்கோராகும்.
இதனால், இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்ட முடியுமா? என்ற சந்தேகம் இந்திய அணி வீராங்கனைகளுக்கு வந்துவிட்டது போலும். இதனால் ஆஸி., பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், சரணாகதி அடைவது போல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையைக் கட்ட19.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
எனவே,85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 7.40 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த இந்திய மகளிர் அணிக்கு 3.70 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




