மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு தனிமைப்படுத்தும் கட்டாயம் கிடையாது..!
மாவட்டங்களை தாண்டி பயணிப்பவர்களுக்கு இனி கட்டாய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் கிடையாது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாவட்டங்கள் இடையே பயணிப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை என்றும், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் 96 மணி நேரத்திற்குள் மேற்பட்ட கொரொனா பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்று அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சான்றுகள் இல்லாத பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சான்று உள்ளவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகரீதியாக தமிழகம் வந்து 72 மணி நேரத்திற்குள் சொந்த ஊர் திரும்புவதற்கு பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப் போவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.







