திடீர் கனமழையாக மாறிய தமிழகத்தின் வானிலை..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளான கச்சூர், புத்தூர், புதுப்பேட்டை, வேத்தக்கட்டு உள்ளிட்ட இடங்களில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளான கோபால்பட்டி, சாணார்பட்டி, கன்னியாபுரம், மேட்டுக்கடை, அய்யாப்பட்டி, கணவாய் பட்டி உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.





