--- --:--:-- --

இந்த புதிய ரயில் வழித் தடங்களுக்கு 1% நிலத்தைக் கூட தமிழக அரசு கையகப்படுத்தி தரவில்லை..!

10

மிழகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

இதில் ரயில்வே திட்டங்களுக்காக மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை 1,052 ஹெக்டேர் (அதாவது 24%) நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்தினால் மட்டுமே, அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 

குறிப்பாக மூன்று முக்கிய திட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி மிக மோசமாக உள்ளது. அத்திப்பட்டு – புத்தூர் புதிய ரயில் பாதை (88 கி.மீ), மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை (41 கி.மீ), தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை (52 கி.மீ) ஆகிய திட்டங்களுக்கு ஒரு சதவீத நிலத்தைக் கூட மாநில அரசு இதுவரை கையகப்படுத்தித் தரவில்லை. தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்காக மத்திய அரசு போதிய நிதியை வழங்கத் தயாராக இருக்கிறது என்று அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

 

2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேயின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஒட்டுமொத்த ரயில்வே திட்டங்களின் மதிப்பு ரூ35,700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த காலத்திற்குள் முடிவடைவதை உறுதி செய்ய, நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது நடந்தால் மட்டுமே தமிழகத்தின் போக்குவரத்து கட்டமைப்பு அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon