உணவு டெலிவரி செய்வது போல நடித்து இருசக்கர வாகனத்தை திருடிய நபர்..!
சென்னை அம்பத்தூர் பகுதியில் உணவு டெலிவரி செய்வது போல நடித்து இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அம்பத்தூர் பகுதியில் வீடு கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திடீரென மாயமாகின.
வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருடுபோன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடிவந்தனர்.
இந்நிலையில் புத்தூர் பகுதியில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்கு ஆவணங்களும் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அதில் அந்த நபர் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பதும் இருசக்கர வாகனங்கள் திருட்டுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
உணவு டெலிவரிக்கு செல்லும்போது ஆள் இல்லாத இடத்தை நோட்டமிட்டு வாகனங்களை திருடி வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதைதொடர்ந்து ஜோசப் தேக்கி வைத்திருந்த ஏறி இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.





