மக்களவை தேர்தலில் தேசிய மாநாடு கட்சி தனித்து போட்டி..!
மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் I.N.D.I.A. கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நியூஸ் 18 மூலமாக அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஃபரூக் அப்துல்லாவின் அறிவிப்பு மற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆளும் பாஜக தலைமையில் வழக்கமான தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது. இதேபோன்று எதிர்க்கட்சிகள் பல ஒருங்கிணைக்கப்பட்டு INDIA என்ற கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல், திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன்பின்னர் ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள 5 மக்களவை தொகுதிகளிலும் தாங்கள் தனித்து போட்டியிடப் போவதாக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டதுதான் இந்த அறிவிப்புக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பரூக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.தேசிய மாநாட்டு கட்சியின் இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.





