--- --:--:-- --

செல்லும் இடமெல்லாம் குழந்தையுடன் பயணிக்கும் ’உபர் ஈட்ஸ்’ நிறுவனத்தில் வேலைசெய்யும் தாய்

8

குழந்தை வளர்ப்பு என்பது பல பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. பலர் தங்கள் கனவு வேலையை உதறி விட கூட நேரிடுகிறது. இந்நிலையில் சென்னையில் உபர் ஈட்ஸ் உணவு டெலிவரி செய்து கொண்டே குழந்தையை பார்த்துக் கொள்ளும் தாய் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

முதுகில் உணவு பொருட்கள் அடங்கிய பெரிய பை. முன்னே தன்னுடன் சேர்த்து கட்டப்பட்ட குழந்தை என இரு சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்கிறார் வள்ளி. குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாகவும், ஒன்றரை வயதாகும் குழந்தையை வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததாலும் குழந்தையை சுமந்து கொண்டு சென்னை நகரை வலம் வருகிறார் வள்ளி.

உணவு டெலிவரி செய்யும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதும் ஒரு சவாலாக இருந்தாலும் ஏற்கனவே இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்ததால் அதை சமாளித்து விடுகிறார். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து ஆர்டர் கிடைத்தால் மட்டுமே ஓரளவு உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை ஈட்ட முடியும் என்று கூறுகிறார்.

 

குழந்தையுடன் ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய நேரிட்டாலும் வள்ளி தன்னம்பிக்கையுடன் தனது பயணத்தை தொடர்கிறார். வாழ்க்கை பயணத்தை மலரவைக்கும் இந்த ஒன்றரை வயது மகனை தனது பலமாக நினைக்கும் இந்த பெண் தனது தன்னம்பிக்கையால் அனைவரையும் விழி விரியவைக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon