செந்தில் பாலாஜி தொடந்த வழக்கை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்!
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடந்த வழக்கின் தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூலை 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது.
அதேபோல், அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரி ஏற்கனவே தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கபடும் என அறிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து 46 ஆவது முறையாக அவருடைய நீதிமன்ற காவலை ஜூலை 16 ஆம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




