--- --:--:-- --

நிதின் நபின் தலைவரான பின் நடந்த மெகா மாற்றம்..!

01

தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்பட 65 நிர்வாகிகளை மாற்றி பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற நிதின் நபின், தனது தலைமையின் கீழ் செயல்படும் புதிய நிர்வாகிகளின் பட்டியலை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். அதன்படி, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, ஆந்திரா முன்னாள் பாஜக தலைவர் டி. புரந்தரேஸ்வரி, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பார்தி ப்ரவீன் பவார், முன்னாள் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத், வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, ரேகா வர்மா, டாக்டர் மதுசந்தகர் உள்பட 13 பேர் பாஜக தேசிய துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

2014ஆம் ஆண்டுக்கு பின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக பொருளாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உடைய பி.எல் சந்தோஷ் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, முன்னாள் திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் முதல்முறையாக பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

மாநிலங்களவை உறுப்பினர் வினோத் தாவ்டே, சுனில் பன்சல் உள்பட 8 பேர் பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த கே.சுரந்தரன், அனில் ஆண்டனி, சந்தீப் பதக், கவிதா படிதர், மனோஜ் திகா உள்பட 16 பேர் முதல்முறையாக தேசியச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

பாஜகவின் தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக சமூக வலைதள தேசிய இணை ஒருங்கிணைப்பாளராக ப்ரீத்தி காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

அதேநேரம், பாஜகவின் தேர்தல் வியூகங்களிலும் அரசியல் பிரசாரங்களிலும் கடந்த பத்து ஆண்டுகளாக மிக முக்கிய ஆயுதமாக விளங்கிய தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா விடுவிக்கப்பட்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே என்பவர் ஐடி விங் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிய அணி இளமையும், தொண்டர்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

 

மழைக்கால கூட்டத் தொடரை ஒட்டி மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கக் கூடும் என தகவல் பரவிய நிலையில் அதற்கு அச்சாரம் போடும் விதமாக பாஜக நிர்வாகிகள் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வர உள்ள உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களையும், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்தயாரிப்பாகவும் இந்த நிர்வாகிகள் மாற்றம் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon