--- --:--:-- --

சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் ஆகிய மக்கள் விரோத நடவடிக்கையை கைவிடாவிட்டால் முழு அடைப்பு போராட்டத்தை அரசு எதிர்கொள்ள நேரிடும் – கோவை எம்.பி.நடராஜன் எச்சரிக்கை

b41a865a-9b87-45bc-bc7c-821b111cd97b

அநியாய சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் இவற்றை கைவிடாவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளை திரட்டி மாபெரும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது, அநியாய சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்,மாநகரம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள அனைத்து இணைப்பு சாலைகளையும் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் கோவை மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து வெள்ளியன்று மனு அளித்தனர்.

 

இதுகுறித்து எம்.பி பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அந்நிய நாட்டு சூயஸ் நிறுவனத்திடம் வழங்கியதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது.எந்த தொழில் நுட்ப வசதி வாய்ப்பும் இல்லாத காலத்திலேயே நமது ஊழியர்கள் சிறுவாணி பகுதியில் இருந்து குழாய் பதித்து குடிநீரை கோவை மாநகரத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

இன்றுவரை கோவை மாநகராட்சியே மாநகர மக்களுக்கான குடிநீர் விநியோகித்தை செய்துவந்துள்ளது. இன்று நம்மிடம் பல திறமை மிக்க இளைஞர்கள், ஊழியர்கள், தொழிற்நுட்ப வசதிகள் நம்மிடம் உள்ளது. இந்நிலையில் நமது கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அந்நிய நாட்டு சூயஸ் நிறுவனம் வழங்கும் என ஒப்பந்தத்தை கோவை மாநகராட்சி மேற்கொண்டது மோசடியானது.

 

இது எதிர்காலத்தில் குடிநீருக்கு அந்நியர்களை கையேந்தவைக்கும் என்பது மட்டுமல்லாமல் குடிநீருக்காக ஊதியத்தில் பெரும்பகுதியை செலவழிக்க வேண்டிய அபாயம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பொதுக்குழாய் அகற்றம், குடிநீர் கட்டணம் நிர்ணயிப்பு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு நிபந்தனைகள் உள்ளது.ஆகவே,இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் குறித்து திறந்த மனதுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக மாநகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார் என பேசினார்.

 

இதேபோல கோவை மாநகராட்சி எப்போதும் இல்லாத வகையில் சொத்து வரி உயர்வு என்பது 50 சதவீதம், 100 சதவீதம்வரை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அரசு ஆணை என்கிற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மாநகர மக்களின் மீது பெரிய சுமையை ஏற்படுத்தியதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும்,தங்களது கோரிக்கைகளை கோவை மாநகராட்சி நிறைவேற்றாவிட்டால் அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு கோவை மாநகராட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்பதை அதிகாரியிடம் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் ஆகியவற்றை கண்டித்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரட்டி கோவையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் என தெரிவித்தார்.

 

முன்னதாக கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ வெள்ளிங்கிரி உள்ளிட்ட தலைவர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையர் பிரன்னாராமசாமியை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon