70, 80 காலகட்டத்துக்கு கொண்டு செல்லும் சென்னை உலா பேருந்து
70, 80களின் காலகட்டத்துக்கு சென்று சென்னையை சுற்றி பார்த்தால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்திற்காக சென்னை உலா பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது போக்குவரத்து கழகம். சென்னை வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பராம்பரிய கட்டிடங்களை சுற்றி பார்க்க 70, 80களில் இருந்த மாநகர பேருந்து வடிவிலான பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்னையின் பராம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, மெரினா விவேகானந்தர் இல்லம் உள்பட 17 இடங்களுக்கு சென்று மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் வகையில் சுற்றுலா பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து அதில் பயணித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் வகையில் 5 பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 50 ரூபாய் டிக்கெட்டுகள் எடுத்து வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம்.






