தி.மு.க.ஆட்சியில் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த அணைக்கு வந்த சோதனை: கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் களவாணி கும்பல்.. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ளது வெலக்கல்நத்தம் ஊராட்சி.இந்த ஊராட்சியில் வெலக்கல்நத்தம் அணை என்னும் செட்டேரி அணை உள்ளது.கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை. 1975 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்.மு. கருணாநிதி அவர்களால்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் நீர் வரத்தை நம்பி இந்த செட்டேரி அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த அணை இப்போது தண்ணீர் இன்றி பாலைவனமாக காட்சி அளிக்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த அணை நிரம்பி இருந்ததாகவும், அதன் பின்னர் நீர்வரத்து இன்றி காய்ந்து கிடப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கனிமவளக் கொள்ளை!
இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் அணையின் உள்பகுதியில் பெரிய பெரிய கனரக இயந்திரங்களை கொண்டு பாதை அமைத்து, பல நூறு டிப்பர் லாரிகளில் மண் மற்றும் மணலை கடத்தி உள்ளனர்.
இந்த கனிம வள கடத்தல் நவமணி என்பவர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் இந்த மண் மற்றும் மணல் கடத்தியுள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்துள்ள ஏரி பகுதிகளை சேதப்படுத்தியும், மரங்களை அழித்தும் இந்த கனிமவளக் கொள்ளை நடந்துள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக நாட்றம்பள்ளி வட்டாட்சியராக இருந்த சுமதி கனிமவள கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்குப்பின் நாட்றாம்பள்ளி வட்டாட்சியராக பொறுப்பேற்ற மகாலட்சுமி கனிமவள கடத்தலுக்கு கறார் காட்டியதால் தொழிலை ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தி வைத்துள்ளனர். அவருக்குப்பின் வட்டாட்சியர் ஆக வந்த பூங்கொடி என்பவரை வெங்களாபுரம் ரகு என்பவர் மூலமாக மாமூல் பேசி கனிமவள கடத்தலை தொடர முடிவு செய்து தொழிலில் இறங்கி உள்ளனர்.
கனிமவள கடத்தலில் ஈடுபட்டுள்ள மேற்கண்ட நபர்கள் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் மணல் தொட்டிகளை அமைத்து, செயற்கை மணலை தயாரித்து அன்றாடம் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் விற்று வருவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தேவராஜ் அவரது மகன் பிரபாகரனுக்கு நவமணி ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதாக கூறப்படுகிறது.
கருணாநிதி திறந்து வைத்த அணைக்கு வந்த சோதனை!
இவர்கள் செயற்கை மணல், மண் மற்றும் மணல் கடத்தும் டிப்பர் லாரிகளை இயக்குவதற்காக நீர் வழித் தடங்களை அழித்து புதியதாக பாதைகள் அமைத்து உள்ளனர். இதுகுறித்து வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த தி.மு.க உடன்பிறப்புகள் சிலர் கூறுகையில்” தி.மு.க தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி திறந்து வைத்த அமைக்க தி.மு.க ஆட்சியிலே பாதுகாப்பு இல்லை என்பது வேதனையானது” என்றார்.
ஏரி மண் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு அணைகளையும், கல்வெட்டுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். அதே பகுதியில் திடக்கழிவுகளை சேமிக்க அமைக்கப்பட்டுள்ள கொட்டைகைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வெலக்கல்நத்தம் ஊராட்சி செயலாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது ” பகலிரவு பாராமல் டிப்பர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் மண் மற்றும் மணலை கடத்துகிறார்கள். நான் எந்த ஊருக்கு ஊராட்சி செயலாளராக பணியிட மாறுதலில் வந்து ஒரு மாதம் ஆகிறது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை” என கூறினார்.
காவல்துறை,வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, சமூக காடுகள் வளர்ப்பு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இனியாவது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தந்த துறை அலுவலர்கள் நடப்பது தி.மு.க ஆட்சி என்பதை கவனத்தில்கொண்டு கலைஞர் கருணாநிதி திறந்துவைத்த அணைக்கு பாதுகாப்பு அளித்து நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.







