--- --:--:-- --

திருச்சியில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்…பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டாரா?

1

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது எரிந்த நிலையில் மகளை காண நேரிட்டதாக துடிக்கிறார் சிறுமியின் தாய். திருச்சி மாவட்டத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவரின் 14 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.

 

நேற்று மதியம் வரை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அதன் பிறகு நீண்ட நேரமாக காணவில்லை. 100 நாள் வேலைக்கு சென்றிருந்த சிறுமியின் தாயார் மகளை தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கிராமத்திற்கு அருகில் புதர்கள் நிறைந்த பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

 

காணாமல் போன சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது அது தங்கள் குழந்தை என்பதை அறிந்து அழுது புரண்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினரும் மாணவியின் உடலை கைப்பற்றினர். டிஐஜி, எஸ்பி ஆகியோர் நிகழ்வு இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முற்பட்டபோது வழிமறித்த பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர் .

தனியார் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் மாணவியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவியின் உடல் கிடந்த இடத்தின் அருகே உள்ள மர அரவை மில்லில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கேட்டபோது அங்கிருந்தவர்கள் கேமரா இயங்கவில்லை என்று கூறியதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

 

மாணவியின் உடல் கிடந்த இடத்தில் தீ எரிந்ததற்கான தடயங்கள் இல்லை என்றும் வேறு இடத்தில் கொன்று எரித்து விட்டு அங்கு கொண்டு வந்து போட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அருகே இருக்கும் மர அறுவை மில் சிறுமியின் மரணத்திற்குப்பின் பூட்டப்பட்டு இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

 

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎஸ்பி கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் உடலை வாங்கப் போவதில்லை என்று உறவினர்கள் ஆவேசத்துடன் கூறினர்.

 

கடந்த வாரம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சியில் மேலும் ஒரு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட 20 பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon