--- --:--:-- --

கூட்டணி ஒர்க்அவுட் ஆகாது, வாஷ்அவுட் தான் ஆகும் – விஜய்

9

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் உச்சக்கட்ட அனலை எட்டியுள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் 28 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் 2 இடங்களிலும் (உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி) போட்டியிடுகின்றன.

தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேற்று புதுச்சேரியின் 4 முக்கிய இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். கொக்குபார்க் சந்திப்பில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களைத்தான் நான் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன். உங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளாகிய இவர்களை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். இவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. நமது ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

 

 

புதுச்சேரியில் இரண்டு பெரிய கூட்டணிகள் உள்ளன. ஆனால், அவை மக்களுக்குச் சேவை செய்ய உருவானவை அல்ல. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பெயரளவிலேயே உள்ளது; தமிழகத்தைப் போலவே இங்கும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடும் குழப்பத்தில் உள்ளனர். மறுபுறம், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி என்பது ‘சேர்ந்திருக்க முடியாத சோர்ந்து போன கூட்டணி’. இங்கே நடப்பது மக்கள் அரசியலல்ல, வெறும் அரசியல் வியாபாரம் மட்டுமே.

 

நாம் யாருடனும் ரகசிய உறவு வைத்துக்கொள்ளவில்லை. மக்களை மட்டுமே நம்பிக் களத்தில் இறங்கியுள்ளோம். யார் முதுகில் யார் குத்துவார்கள் என்ற பயம் இருந்தால் அது கூட்டணி ‘ஒர்க்அவுட்’ ஆகாது, ‘வாஷ்அவுட்’ தான் ஆகும்,” என குறிப்பிட்டார்.புதுச்சேரியின் நீண்ட காலக் கோரிக்கையான மாநில அந்தஸ்து குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுமே இதற்காக உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். ரேஷன் கடைகள் மூடப்பட்டது மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாதது குறித்த மக்களின் வலியைப் பகிர்ந்துகொண்ட அவர், இதற்குப் பதில் சொல்ல துணிவில்லாதவர்கள் தன் மீது ‘அரசியல் அனுபவம் இல்லை’ என்று பழிபோடுவதாகச் சாடினார்.

 

 

“நான் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் நபர்களைத் தான் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன். உங்கள் அக்கா, தங்கை, அண்ணா, தம்பியாக அவர்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவர்களுக்கு உங்கள் ‘விசில்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நீங்கள் உங்கள் விஜய்க்குப் போடும் வாக்காக நினைத்து ஆதரவு தாருங்கள்,” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

 

தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்:

புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விஜய் அறிவித்த முக்கிய வாக்குறுதிகள் இதோ:

கவர்னரின் தலையீடு இல்லாத மாநில அந்தஸ்து பெற 100% சட்டப்பூர்வ முயற்சி.

ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்.

* 200 யூனிட் வரை கட்டணமில்லா இலவச மின்சாரம்.

ரூ. 25 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு.

மகப்பேறு உதவித்தொகையாக ரூ. 25,000.

காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ‘அப்ளைடு சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ்’ (Applied Science and Arts) உருவாக்கம்.

100% பயிர் காப்பீடு மற்றும் மீனவர்களுக்கு டீசல் லிட்டருக்கு ரூ. 20 மானியம்.

காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களின் வளர்ச்சிக்கு 25% நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

“தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமையும், அதேபோல் புதுச்சேரியிலும் மாற்றம் நிகழ வேண்டும். ஒருவிரல் புரட்சியான விசில் புரட்சியை உருவாக்கத் தயாரா?” என்ற கேள்வியுடன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார் விஜய்.

 

Leave a Reply

Right Menu Icon