--- --:--:-- --

காங் உட்கட்சி விவகாரங்களில் தோழமை கட்சி தலையிடக் கூடாது – செல்வப்பெருந்தகை

2

காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்களில் தோழமை கட்சிகள் தலையிடக் கூடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் கடன் உத்தரப்பிரதேசத்தை விட அதிகமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்து இருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்வினையாற்றின.

 

மேலும், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்கள் உட்கட்சி விவகாரங்களில் தோழமை கட்சிகள் தலையிடத் தேவையில்லை என வலியுறுத்தி உள்ளார்.

 

முன்னதாக காங்கிரஸ் தனது உட்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் எப்போது உத்தரவிடத் தொடங்கின என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தோழமைக் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள் என்று அக்கட்சியின் தலைவர்களிடம் சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா என வினவியுள்ளார்.

 

பொது அழுத்த அரசியல் இன்றி, பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கூட்டணிகள் உருவாவதாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கூட்டணி கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கி, பாஜக-ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையை பலவீனப்படுத்தும என விமர்சித்துள்ளார்.

Right Menu Icon