இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!
பாலஸ்தீன கமாஸ் விடுதலை அமைப்பு நடத்திய தாக்குதலால் இஸ்ரேலில் சிக்கியுள்ள 15 தமிழர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ள நிலையில் தமிழக அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள காசா பகுதி, ஹமாஸ் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குழுவை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையே அவ்வபோது தாக்குதல்கள் நடைபெறும். இந்நிலையில், இன்று அதிகாலை, காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி சுமார் 7 ஆயிரம் ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க, போர் சூழல் உருவானதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து காசா பகுதி மீது இஸ்ரேலும் சரமாரி பதில் தாக்குதலை நடத்தியது. SWORDS OF IRON என்ற பெயரிலான ஆப்ரேஷனை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.
இதனால், காசாவிலும் குண்டு மழைகள் பொழிகின்றன. இந்நிலையில், தாங்கள் போர் களத்தில் இருப்பதாக கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர், இதுவரையிலும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை ஹமாஸ் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.





