முதன்முறையாக தானமாக பெற்ற சிறுநீரகத்தை மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை !!!
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன் சிவபெருமாள் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி சிவபெருமாள் தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூடத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது,எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் சிவபெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சிவபெருமாளின் குடும்பத்தினர் முன்வரவே கடந்த 5ம் தேதி முதன்முறையாக உடல் உறுப்புகள் தானமாக கோவை அரசு மருத்துவமனையில் பெறப்பட்டது.

பல தனியார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு தானம் பெற்று வந்தாலும் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்படுவதால், மருத்துவர்கள் ஒருவித பதற்றத்துடன் இருந்தனர். இருந்த போதிலும், எவ்வித பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக உடல் உறுப்பு தானம் பெற்று சாதனை படைத்தனர்.
இந்த சூழலில் மேலும், ஒரு சாதனையாக எவ்வித இடையூறும் இல்லாமல் தானமாக பெறப்பட்ட சிறுநீரகத்தை முதல் முறையாக மற்றொருவருக்கு பொருத்தி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், “மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் குமார் (வயது 34) என்பவர் கடந்த மே மாதம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் சிவபெருமாளின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு,அதனை அருண் குமாருக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாகவும்,கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வந்த போதிலும் முதன்முறையாக தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன் ஒருங்கிணைப்பில் மருத்துவர்கள் பிரபாகர், காந்தி மோகன், தினகரன் பாபு, மோகன், ரமேஷ், சாந்தா அருள்மொழி, ஜெயசங்கர் நாராயணன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இடையூறுகளை களைந்து சிறப்பாக செயல்பட்டு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,உடல் உறுப்பு தானங்கள் அதிக அளவில் பெறப்படும் பொழுது பல குடும்பங்களுக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அதிகம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.





