கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை..!
திருச்சி என்ஐடி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக திருச்சி என்.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி மாணவிக்கு ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததை தொடர்ந்து, மாணவ, மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் அருகே செயல்பட்டு வரும் என்ஐடி கல்லூரியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் தங்குவதற்காக 6 விடுதிகள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், என்ஐடி கல்லூரி மகளிர் விடுதியில் இணைய சேவையான வை-பை பழுது பார்ப்பதற்காக நேற்று மதியம் சென்ற ஒப்பந்த பணியாளர் கதிரேசன் என்பவர், அறையில் உறங்கிக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், கதிரேசனை கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவியை தரக்குறைவாக பேசியதாக் கூறப்படுகிறது, இதனால் ஆ விடுதிக் காப்பாளர் ஆகியோரை கண்டித்து விடுதியின் முன்பாக திரண்ட மாணவ-மாணவிகள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விடுதி மாணவிக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து, திருச்சி என்.ஐ.டி விளக்கம் அளித்துள்ளது. அதில், திருச்சி என் ஐ டி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
வரும் காலங்களில் மாணவ – மாணவியர் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக என்ஐடி வளாகத்தில் உள்ள பாதுகாவலர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று என்.ஐ.டி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





