நிறுத்தப்பட்ட திருமணம்! கடும் தாக்குதல்!
சென்னையை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் 40 வயதான செல்வம். கூலி தொழிலாளியான இவர் தமது தாய் தாயாரம்மாளுடன் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். திடீரென அவரது வீட்டிற்கு வந்த காத்தவராயன் என்பவர் தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பல் செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வத்தையும் அவரது தாயாரையும் அந்த கும்பல் வெட்டியது. பதிலுக்கு செல்வமும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவர்கள் 3 பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் வெட்டுபட்ட இரு தரப்பை சேர்ந்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த கலவரத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் இந்த மோதலை தடுக்க முயன்றதுடன் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாயாரம்மாள் உள்ளிட்ட ஐந்து பேரையும் பிடித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 5 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
மோதலில் ஈடுபட்ட செல்வமும், காத்தவராயன் உறவினர்கள் ஆவர். காத்தவராயன் தங்கையை செல்வம் திருமணம் செய்திருந்தார். 2014 ஆம் ஆண்டு செல்வத்தின் மனைவி திடீரென இறந்துவிட்டார். தனது தங்கையை செல்வம் அடித்து கொலை செய்து விட்டதாக காத்தவராயன் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தனது அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ள செல்வம் முடிவு செய்துள்ளார். செல்வத்தின் அக்காவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த தகவலை அறிந்த காத்தவராயன் செல்வத்தின் அக்காவிடம் சென்று செல்வத்தைப் பற்றி தப்பும், தவறுமாக எடுத்துக் கூறியுள்ளார்.
மனம் மாறிய செல்வத்தின் அக்கா அவசர அவசரமாக தமது மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். தனது திருமணத்தை தடுத்த காத்தவராயன் மீது கோபம் கொண்ட செல்வம் அவருக்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
எனவே காத்தவராயன் தமது கூட்டாளிகள் குபேந்திரன், மகேந்திரன் ஆகியோரை அழைத்துக் கொண்டு செல்வத்தின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் இரு தரப்பினரும் மாறி மாறி கத்தியால் வெட்டிக் கொண்டுள்ளனர். இதையடுத்து செல்வம், தாயாரம்மாள், குபேந்திரன், மகேந்திரன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் தாயாரம்மாளை தவிர மற்ற நான்கு பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.





