வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவரை தனிமைப்படுத்த நட்சத்திர ஹோட்டலில் அளிக்கப்படும் கட்டண சலுகை!
வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை பதினைந்தாயிரம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவ்வாறு வருவோர் நட்சத்திர விடுதிகளில் குறைந்த செலவில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி வழியாக சுமார் 15,000 பேர் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இதுவரை 130 விமானங்களில் சுமார் 12 ஆயிரம் பேர் திரும்பியுள்ளனர். இவ்வாறு வருவோருக்கு விமான நிலையத்தில் கொரொனா பரிசோதனை செய்யப்படுகிறது. பாசிட்டிவ் என வருவோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நெகட்டிவ் என வருவோர் இலவசமாக தனிமைப்படுத்தலில் இருப்பதற்காக வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் சென்னையில் உள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐடிசி சோலார் ஹோட்டலில் வழக்கமாக ஒரு நாளைக்கு தங்குவதற்கு 15,000 ரூபாய்.
ஆனால் தற்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தங்க வைக்க வேறு எங்கேயும் இடம் இல்லாததால் ஒரு நாளுக்கு 2 ஆயிரம் முதல் 2,500 ரூபாய் வாடகை என சலுகை வழங்கி உள்ளதாக தெரிவிக்கிறார் நட்சத்திர விடுதிகள் சங்க நிர்வாகி.
வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்குவதற்காக சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மூன்று நட்சத்திர விடுதிகளும் பத்திற்கும் மேற்பட்ட ஐந்து நட்சத்திர விடுதிகளும் தயார் செய்து வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.







