சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஸ்டாலின் ஏன் சொன்னார் தெரியுமா? அவரே அளித்த விளக்கம்
திமுகவின் நலனுக்காகவே, சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்ததாக, திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, திமுகவினருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:திமுக வரலாற்றில் ஒவ்வொரு பொதுக்குழுவுமே எழுச்சிமிக்க ஒரு புதிய அத்தியாயம்தான். நவம்பர் 10இல் நடந்த பொதுக்குழுவும், அதன் தீர்மானங்களும், கட்சியின் சட்டவிதிகளில் காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட திருத்தங்களும், பொறுப்புகளை உணர்ந்து, பணியை தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கக் கூடியவை.
பொதுக்குழுவில் வெளிப்படையான கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை அதில் பேசியவர்கள் முன்வைத்தனர். இந்த உட்கட்சி ஜனநாயகம்தான் 70 ஆண்டுகால திமுகவின் தனிப்பெரும் சிறப்பு.
திமுகவின் செயல் தலைவராக இருந்து மாவட்டங்கள் தொடங்கி கிளைக் கழகங்கள் வரை ஆய்வுக்கூட்டங்களை நடத்தியபோது, கட்சியின் நலன் காக்க சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தேன். அதையே கழகப் பொதுக்குழுவிலும் மீண்டும் நினைவூட்டினேன்.
கட்சிக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் திருந்தவேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள் என்பதை பொதுக்குழுவில் எடுத்துரைத்து, எனக்காக அல்ல, கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன்.
கட்சிப் பொதுக்குழுவின் அத்தனை சிறப்பம்சங்களையும் மறைத்துவிட்டு, “ஸ்டாலின் சர்வாதிகாரி ஆகிறாரா?” என ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஊடகத்துறை நண்பர்களின் இக்கட்டான நிலையை நான் அறிவேன். திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அதன் வழிமுறைகள் ஜனநாயகத்தன்மை வாய்ந்தவை என்று, மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.





