--- --:--:-- --

விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

1

தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் புதன்கிழமை (27.08.2025) விநாயகர் சதுர்த்தி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம் பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (26.08.2025 – செவ்வாய்கிழமை) 675 பேருந்துகளும், வியாழக்கிழமை (28.08.2025) 610 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (29.08.2025) 405 பேருந்துகளும், சனிக்கிழமை (30.08.2025) 380 பேருந்துகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (செவ்வாய்கிழமை) 110 பேருந்துகளும், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் 90 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 26.08.2025, 28.08.2025 மற்றும் 29.08.2025 ஆகிய நாட்களில் 24 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon