வாயில்லா பிராணிகளுக்கு இரக்கம்…”மனிதநேயத்தால் வியக்க வைத்த அரசியல் பிரமுகரின் மகன்”! சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் காணொலிகள்!
சமீப காலமாக ஜெயபிரதீப் என்ற பெயர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திடீர் திடீரென்று புதிது புதிதாக மக்களின் கவனத்தை பெறும் இந்த நபர் யார்?
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பேரிடருக்கு தனது கோடிக்கணக்கான சம்பாத்தியம் முழுவதையும் அர்ப்பணிக்கிறேன், நீங்கள் தயாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பகிரங்க சவால் விடுத்து அரசியல் கட்சியினரை வாய்பிளக்க வைத்ததோடு தமிழகத்தின் மொத்த கவனத்தையும் ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருந்தது. அன்றைய தினம் முதல் தினமும் அங்கே மலர் அலங்காரம் பளிச்சிடுகிறது. எம்ஜிஆர் மீது அதீத விசுவாசம் கொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இச்செயலால் அகமகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
தற்போது மனிதநேய செயல் ஒன்றின் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறார் அந்த நபர். பாலமேட்டில் டீக்கடை நடத்திவரும் முனியாண்டி ராஜா என்பவர் தான் வளர்த்த பசுமாடு ஒன்றை ரூ.20 ஆயிரத்துக்கு வெளிநபரிடம் விற்றுள்ளார். இந்த பசுமாட்டுடன் கூடவே வளர்ந்த காளைக்கு அதனை பிரிய மனமில்லை. பசுமாடு ஏற்றப்பட்ட வண்டியையே சுற்றி சுற்றி வந்துள்ளது.

பாசப்பிணைப்பால் ஒரு கி.மீ. தூரம் வரை அந்த வண்டியை பின்தொடர்ந்து காளைமாடு வேகமாக விரட்டிச் சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனைப் பார்த்த ஜெயபிரதீப் உடனடியாக அந்த பசுமாட்டை தனது சொந்த செலவில் விலை கொடுத்து வாங்கி பாசத்துக்கு ஏங்கிய காளை மாட்டுடன் சேர்த்து வைத்து அப்பகுதி பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றார்.
ஜெயபிரதீப்பிடம் இது குறித்து கேட்டதற்கு, “எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களைப் போலவே எல்லா உயிரினங்களுக்கும் மனங்களை படைத்திருக்கிறான். அந்த மனங்களில் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கின்றன. அதனை தனது உணர்ச்சிகளால் வெளிப்படுத்தும். அந்த உணர்வுகளை புரிந்து கொண்டு மனிதர்களாகிய நாம் அதற்கு மதிப்பளித்து எல்லா உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

ஜெயபிரதீப் என்பவர் வேறு யாருமல்ல, தமிழகத்தின் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்பதும், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் உடன் பிறந்த சகோதரர் என்பதும்தான் ஹைலைட்டான விஷயம். அரசியலைத் தாண்டிய இவரது மனிதநேய பயணம் அதிமுகவினரை மட்டுமல்ல, மாற்றுக்கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.






