தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் வரும் 8ம் தேதி மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், வரும் 9ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வரும் 10 முதல் 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல், வரும் 13ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




