கோவையில் மத்திய அரசுக்கு எதிராக செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி..!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திமுக முக்கிய நிர்வாகி செந்தில் பாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். கோவை மாவட்டத்தின் பத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் நடைமுறைகள் முடிந்து, தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திமுக மற்றும் அதன் தோழமை இயக்க வேட்பாளர்கள் மிக வேகமாக மக்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருவதாகவும், வரும் 13-ஆம் தேதிக்குள் கோவை தெற்கு தொகுதியின் அனைத்து வார்டுகள், தெருக்கள் மற்றும் இல்லங்களில் முதல் கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு இரண்டாம் கட்டப் பிரச்சாரம் தொடங்கும் என்றும், மக்கள் செல்லும் இடமெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் மகத்தான வரவேற்பு அளித்து வருவதாகவும், இது உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் எழுச்சியாக இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு இருக்காது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்வைத்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் குறித்து மாற்றுக் கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை என்றார். திமுகவில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை என்றும், இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கத் தயாராகி வருவதாகவும் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கோவைக்கு மத்திய அரசின் மூலம் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதை விளக்கி வாக்கு கேட்டிருந்தால் அது சரியான சூழலாக இருந்திருக்கும் என்றும், எதையுமே செய்யாதவர்கள் அரசு மீதும், குறிப்பாகத் துணை முதலமைச்சர் மீதும் காழ்ப்புணர்ச்சியில் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அவர் சாடினார். தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து தங்கிப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கியிருந்தால் மக்கள் திரும்பிப் பார்த்திருப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை முன்வைத்த அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கை எட்டிய மாநிலம் தமிழகம் தான் என மத்திய அரசின் தரவுகளே சொல்வதாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி காலத்தில் இரட்டை என்ஜின் அரசு இருந்தபோது தமிழகமும் புதுச்சேரியும் என்ன வளர்ச்சியைப் பெற்றது என்று கேள்வி எழுப்பினார். மேலும், கல்வி, ஜல் ஜீவன் மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், தமிழகம் கட்டும் ஒரு ரூபாய் வரிக்கு வெறும் 29 பைசா மட்டுமே திருப்பித் தரப்பட்டு, மீதித் தொகை பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காகத் தமிழக அரசு 1352 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நிலம் எடுத்துக் கொடுத்தும், மத்திய அரசு அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளதாகச் சாடினார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறிய அவர், மக்கள் தொகை குறைவாக இருப்பதாகக் காரணம் சொல்வது ஏற்புடையதல்ல என்றும், கோவையை விடக் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார். தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்களுக்குச் சாதகமாக இருப்பது போலக் காட்டிக் கொள்வதும், திருக்குறள் பேசுவதும் பாஜகவின் வழக்கம் என்று விமர்சித்த அவர், கோவையின் 10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.
இறுதியாக, அண்ணாமலை மற்றும் பியூஸ் கோயல் ஆகியோரின் தொடர் பேட்டிகள் குறித்துப் பேசிய அவர், அண்ணாமலை மாநிலப் பொறுப்பில் இருந்தபோது கூட அடிக்கடி வராதவர், இப்போது மட்டும் வாரம் ஒருமுறை வருவதாகக் குறிப்பிட்டார். “அறிவாலயத்தின் அடிசெங்கல் வரை உருவுவோம்” என்று முன்பு அண்ணாமலை பேசியதை நினைவு கூர்ந்த செந்தில் பாலாஜி, “அண்ணாமலையை முதலில் செங்கல்லைக் கட்டச் சொல்லுங்கள், போய் டவுசர் போட்டுக்கொண்டு வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள்” என்று மிகக் கடுமையான விமர்சனத்துடன் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




