--- --:--:-- --

அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி! 471 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது… தேர்தலுக்கு திமுக போடும் பலே கணக்கு!

11

ட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி இருக்கிறது. இதன் மூலம், 470 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீண்டும் அமைச்சரவையில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளார்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக தேவசகாயம் என்பவர் புகார் அளித்தார்.

 

இதையடுத்து கடந்த 2016இல் பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், 2019இல் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது.

 

இதனிடையே 2021இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்றது. இதில், மின் துறை அமைச்சரானார் செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். மறுபுறம், கடந்த 2022ஆம் ஆண்டில், தன் மீதான வழக்கை ரத்து செய்யகோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

 

இந்த சூழலில், 2023 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அடுத்த நாள், ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.

 

அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவை ஜாமீன் மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு என இரு தரப்பிற்கும் இடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

விசாரணையின் போது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு மீதான விசாரணையைத் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதனையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

 

இந்நிலையில், நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

 

அதன்படி செந்தில்பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதியாகவே செந்தில் பாலாஜி உள்ளதால் ஜாமீன் தரப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததற்கான இரண்டு காரணங்கள் ஒன்று அவர் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கிறார் என்பது இரண்டாவது, வழக்கு விசாரணை நிறைவடைய நீண்ட காலம் ஆகும் என்பது. இந்த இரண்டு காரணங்களையும் சேர்த்து நீண்ட நாட்களாக ஒருவரை விசாரணை என்ற பெயரில் சிறையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது எனக்கூறி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு

 

 

செந்தில் பாலாஜி தலா 25 லட்சம் ரூபாய்க்கு 2 நபர் ஜாமீன், அத்துடன் பிரதி திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும். சாட்சியங்களை கலைக்கக் கூடாது; வாய்தா கோரக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

 

கடந்தாண்டு ஜூலை 14இல் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சிறையில் இருந்து வெளியே வருகிறார். இந்த வழக்கில் 58 முறை செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவழியாக சுதந்திரக் காற்றை செந்தில் பாலாஜி சுவாசிக்க உள்ளார்.

 

அமைச்சரவையில் செந்தில் பாலாஜியை சேர்த்துக் கொள்ள எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பதால், விரைவில் நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு செல்லும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. விரைவில் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது. அப்போது சரியாக செயல்படாத சில சீனியர் அமைச்சர்களை நீக்கம் செய்யவும், அத்துடன், செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

செந்தில் பாலாஜி போன்ற துடிப்பானவர்கள் இருந்தால் தான் வரும் சட்டமன்றத் தேர்தலை துணிவாக திமுக எதிர்கொள்ள முடியும் என்ற நிலையில், சிறையில் தண்டனை அனுபவித்ததற்கு பரிசாக அவருக்கு அமைச்சர் பதவியை தர ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் வளர்ந்து வரும் பாஜகவிற்கு செக் வைக்க செந்தில் பாலாஜியின் வருகை நிச்சயம் கைகொடுக்கும் என கருதுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

 

எது எப்படியானாலும், திமுகவுக்கு செந்தில் பாலாஜின் விடுதலை பெரிய தெம்பைத் தந்துள்ளது. திமுக ஆதரவாளர்கள் அவரின் விடுதலையை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இனி கொங்கு மண்டலத்தில் மீண்டும் தனது தேர்தல் பணிகளை செந்தில் பாலாஜி தொடர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. செந்தில் பாலாஜி வருகை, கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு நிச்சயம் பலத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

அதே நேரம், அமைச்சரவையில் செந்தில் பாலாஜியை சேர்க்க தமிழக ஆளுநர் ரவி என்ன மாதிரி குடைச்சல் தருவார் என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

 

Right Menu Icon