கல்லூரி மாணவிக்கு சுய பிரசவம் பார்த்த காதலன்! குழந்தை உயிரிழப்பு!
கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார் பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொன்னேரி அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் சௌந்தர் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமடைந்து ஏழுமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த விவகாரம் அந்தப்பெண்ணின் தாயாருக்கு ஏற்கனவே தெரிந்த நிலையில் நேற்று இரவு மாணவி திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சவுந்தர் அங்கு சென்று கர்ப்பிணி காதலியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் விவகாரம் வெளிச்சத்திற்கு வரும் என அஞ்சி அவர் அருகில் உள்ள தைல மர தோட்டத்தில் வைத்து மாணவிக்கு சுய பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது குழந்தையின் கை மட்டும் வெளியே வந்த நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பதற்றமடைந்த சௌந்தர் மாணவியின் தாயாரை வரவழைத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். அங்கு அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த கும்மிடிபூண்டி போலீசார் சுய பிரசவம் செய்த குற்றத்திற்காக கைது செய்ததுடன் மாணவியின் தாயாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






