பீகாரில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல்..!
பீகாரில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி மற்றும் நான்கு அமைச்சர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல்கட்டமாக 71 இடங்களில் கடந்த 28 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இன்று இரண்டாவது கட்டமாக 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு பதிவுக்கு 41 ஆயிரத்து 362 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க 2 கோடியே 85 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 1500 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி குறிப்பிடத்தக்கவர்.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் இவர் பாரதிய ஜனதா வேட்பாளர் சதீஷ்குமாரிடமிருந்து கடும் சவாலை எதிர் கொண்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் தேஜஸ்வியின் தாயாரும் முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவியை தோற்கடித்த சதீஷ்குமார் இந்த முறையும் அதே போன்றதொரு அதிர்ச்சி வைத்தியத்தை தேஜஸ்விக்கு தருவார் என பாரதிய ஜனதா நம்புகிறது.
ஆனால் வேலைவாய்ப்பின்மை, கொரொனா பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் போன்றவற்றில் நிதிஷ்குமாருக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்து தொகுதியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறார் தேஜஸ்வி.
இது தவிர முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தவருமான சத்ருகன் சின்காவின் மகன் போட்டியிடும் வங்கிபூர் தொகுதியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் களம் கண்டுள்ள நிலையில் நிதின் நவீன் பலமுறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர்கள் தவிர தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நான்கு பேரும் இரண்டாம் கட்ட தேர்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இவை தவிர்த்து தலைநகர் பாட்னாவில் உள்ள நான்கு தொகுதிகளும் நாளை தேர்தலை சந்திக்கின்றன. இவை அனைத்தும் தற்போது பாரதிய ஜனதா வசம் உள்ளன.






