--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா.? தடையா..? நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

k

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக மற்றும் 6 பேர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா..? தடை வருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பலரும், தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல், உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறதோ? என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.

 

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக இழுபறியாகி வந்த உள்ளாட்சித் தேர்தல், ஒரு வழியாக வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுவும் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கு மட்டுமே இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் எப்போது என அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி மாதம் தான் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால்,உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. மேலும் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தமிழக அவசரச் சட்டம் பிறப்பித்ததற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

மேலும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், தொகுதி மற்றும் வார்டுகள் மறு வரையறை செய்யாதது, இட ஒதுக்கீடு குறித்தும், சுழற்சி அடிப்படையில் பதவி ஒதுக்கீடு போன்றவற்றை முறையாக அறிவிக்காதது போன்றவற்றை எதிர்த்தும்,திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இவற்றையெல்லாம் முறையாக செய்து முடிக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கவும் திமுக தரப்பில் மட்டுமின்றி, மேலும் 6 பேர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் தற்போது தேதி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் திமுக தரப்பில் இன்றும் புதிதாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் நாளை மறுநாள் தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் வேட்பு மனுத் தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எனவே தேர்தல் நடத்தப்படுமா? தடை விதிக்கப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு காரணமாக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கூட, தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டாமல் ஒரு வித தயக்கத்திலேயே உள்ளனர். ஒரு வேளை தடை விதிக்கப்பட்டால் செலவு செய்தது வீணாகப் போய் விடும் என பலரும் கருதுவதே இந்த சுணக்கத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே நாளைய உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில், நீதிபதிகள் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Right Menu Icon