மதுரையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது..!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மற்றும் நெல்லையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அண்மையில் தூய்மை பணியாளர்கள் 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது பேசுபொருளானது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியிலும் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மயத்தைக் கைவிடுதல், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அதிகாரிகள் பழிவாங்குவதாகவும் எனவே அவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த அவர்கள், சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இப்போராட்டத்தை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி நிர்வாகத்தினர் 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தீபாவளி போனஸ், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஊதிய உயர்வு, பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு மீண்டும் பணி உள்ளிட்ட 4 வாக்குறுதிகளை துணை ஆணையர் எழுத்துப்பூர்வமாக அளித்தார்.
ஆனால், கோரிக்கைகள் சார்ந்து மாநகராட்சி நிர்வாகம் உரிய முடிவுகள் எடுக்கவில்லை என கூறியும், வாக்குறுதிகளை ஏற்க மறுத்தும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம், இரவு 9 மணி வரை என சுமார் 12 மணி நேரம் நடைபெற்றதால் மதுரையே பரபரப்பாக மாறியது. இந்நிலையில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்த காவல்துறையினர், ஏராளமானோரை கைது செய்தனர். ஒத்துழைக்க மறுத்த பணியாளர்களை குண்டுக்கட்டாக வாகனங்களுக்குத் தூக்கிச் சென்றனர்.
இதேபோல நெல்லை மாநகராட்சியிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மைய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப் உள்ளிட்டவை அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.





