--- --:--:-- --

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

6.2

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், உள்ளாட்சி துறையினர், தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வரை பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து, உயிரிழப்பும் 650 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிப்புக்கு ஆளாவோருக்கு சிகிச்சை வசதிகள் செய்யவும் நாடு முழுவதும் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

கொரோனா தடுப்பு பணி மற்றும் சிகிச்சை வழங்குவதில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் பல்வேறு பிரிவினர், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினரும் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டமும் ஒரு போர் போன்றதாகவே பார்க்கப்படுகிறது.

 

இதில் களத்தில் நின்று நேரடியாக போராடும் பல்வேறு துறையினருக்கும் கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் அதிகமாகவே உள்ளதுடன், தற்போது பாதிப்புகளும் ஏற்படத் தொடங்கி விட்டன.

 

இதனால், உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் பணிபுரிவோர் தான் உண்மையில் கடவுளாக கருதப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு உரிய மரியாதையும், பாதுகாப்பும் வழங்குவதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மேலும் கவுரவம் வழங்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்களது உடல், அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பாக, அரசு மருத்துவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

 

பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon