--- --:--:-- --

அம்மாபாளையம் நகராட்சி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : வாழ்க்கையில் நமது லட்சியம் நிறைவேற சாலை விதிகளை மதிக்க வேண்டும்! மாநகர உதவி ஆணையர் ஆ.சேகர் அறிவுரை!

9.1

திருப்பூர் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க பட்டய தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் ஆ.சேகர் மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது :- இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு பல்வேறு நிலைகளில் சாலைகளும் மேம்படுத்தப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டு வருகிறது.

 

ஆதலால் நாம் சாலையில் மிகுந்த பாதுகாப்புடன், கவனமாக செல்ல வேண்டும். உலகில் பாதுகாப்பற்ற ஒரே இடம் எதுவென்றால் அது சாலை தான். இந்தியாவில் ஒரு வருடத்தில் சாலை விபத்தினால் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இறக்கிறார்கள். அதே போல் 6 லட்சம் பேர்கள் விபத்தினால் காயம் அடைகிறார்கள். குறிப்பாக வருடத்திற்கு 8 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 30 ஆயிரம் பேர்கள் இறந்து போகிறார்கள்.

நமது லட்சியம் நிறைவேற உயிருடன் இருக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் வேலைவாய்ப்பு போய் போவதுடன் நம் உடலின் செயல்பாடுகளும் குறைவதால் நமது லட்சியம் நிறைவேறாமல் போய்விடுகிறது. மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வரும்பொழுது ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும். ஆதலால் வாழ்க்கையில் நமது இலட்சியம் நிறைவேற சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

 

இதை செயல்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மதிப்போம், மதிப்போம் சாலை விதிகளை மதிப்போம். தடுப்போம் தடுப்போம் சாலை விபத்தினை தடுப்போம் என்று அவர் கோஷமிட மாணவ, மாணவிகளும் கைகளை உயர்த்தி கோஷம் போட்டனர்.

 

தொடர்ந்து போதை மருந்து ஒழிப்பு குறித்து தத்துவங்கள், ஓவியம் வரைந்து வந்த 8 ம் வகுப்பு மாணவிகள் பிரனித்தா, பிரியதர்ஷினி,
ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள லைப்ரரிக்கு தொடர்ந்து வந்து புத்தகம் படித்து வரும் 2 ம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.

Right Menu Icon