--- --:--:-- --

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு..!

01

பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கிய அண்ணாமலையின் ராஜினாமா முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்தார். அப்போது, பாஜகவில் இருந்து விலகுவதாக 5 பக்க கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

 

இந்தச் சந்திப்புகளின்போது, பாஜகவில் இருந்து விலகும் முடிவை கைவிடுமாறு அண்ணாமலையிடம் இரு தலைவர்களும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாஜக தலைமை இதுவரை விலகலை ஏற்காதபோதும் தனிக்கட்சி தொடங்கும் தனது முடிவில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

பாஜகவில் இருந்து விலகும் முடிவை அதன் தலைமையான ஆர்எஸ்எஸ்-இடம் அண்ணாமலை கூறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த சில மாதங்களுக்குள் தனது புதிய கட்சியின் பெயரை முறைப்படி அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான முதற்கட்டப் பணிகள் மற்றும் நிபுணர்களுடனான ஆலோசனையை ஏற்கனவே ரகசியமாகத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

தேசிய பார்வை கொண்ட மாநிலக் கட்சியாகவும், தமிழ்நாட்டின் குரலை எதிரொலிக்கும் மதச்சார்பற்ற கட்சியாகவும் தனது புதிய கட்சியை கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் இன்று மதியம் 12 மணிக்கு மனம் திறந்து உரையாட இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதற்கிடையே, அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சகோதரர் அண்ணாமலை தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon