--- --:--:-- --

நெல்லையில் கவினின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

2

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலைப் பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

 

இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சுர்ஜித்தின் தந்தையும் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.

 

ஆனால், குற்றவாளியான சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கோரிக்கையை முன்வைத்து கவினின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் 5 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கவினின் உடலைப் பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

இந்நிலையில், கவின் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவருடைய தோழி தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தானும் கவினும் உண்மையாகவே காதலித்ததாகவும், இந்தக் கொலையில் தனது பெற்றோருக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழங்கிய ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர், கொலை நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று கவினின் காதலி பணிபுரிந்த தனியார் கிளினிக் மருத்துவமனையில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

மேலும், கொலையாளி சுர்ஜித், அவரின் சகோதரி மற்றும் தந்தை சரவணன் ஆகிய மூன்று பேரின் செல்போன்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வு முடிவில் உதவி ஆய்வாளர் சரவணன், கொலை வழக்கில் நேரடியாக ஈடுபட்டாரா? என்ற தகவல் தெரியவரும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கவினின் செல்போனில் உள்ள தகவல்களைத் திரட்டுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கவின் கொலையில் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு உள்ளது நிரூபணமானால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon