--- --:--:-- --

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடைவிதிக்க மறுப்பு!

7

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏன் அனைவரும் மனு தாக்கல் செய்கின்றனர் என்ற காரணத்தை அறிய வில்லை என தலைமை நீதிபதி எஸ்‌ஏ பாப்டே தெரிவித்தார். மனுக்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமான உத்தரவை பிறப்பிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார்.

 

தற்போது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் என்பிஆர் நடைமுறையை மூன்று மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் .

 

புதியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 80 மனுக்களுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் இந்த வழக்குகள் அனைத்தையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon