ராமநாதபுரம் தொகுதி..வானம் பார்த்த பூமியில் வாகை சூடுவாரா ஓபிஎஸ்?
வாக்குகளுக்கு வலைவீசும் வேட்பாளர்கள்..
கடலோர மாவட்டத்தில் கரை சேருவது யார்?
தமிழகத்தில் அதிக முக்கியத்துவம் பெறாத ராமநாதபுரம், இந்த தேர்தலில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள ராம நாதபுரத்தில் வேட்பாளர்கள் தண்ணீராய் பணத்தை இரைக்க, கடலோர மாவட்டத்தில் கரை சேருவது யார் என்பதை, குற்றம் குற்றமே களத்தில் கள ஆய்வு நடத்தி உள்ளது.
ராமநாதபுரம் தொகுதியானது, கடந்த 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நீண்ட கடலோரத்தை கொண்ட இத்தொகுதியில் மீன்பிடித் தொழில் பிரதானமாகும். ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில், பாம்பன் பாலம், ஏர்வாடி தர்கா என சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களும் இத்தொகுதியில் உள்ளன.
ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியானது, ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ளது.
கடந்த 1957 முதல் நடந்த மக்களவைத் தேர்தலில் 5 முறை காங்கிரஸும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், தமாகா, பார்வர்ட் பிளாக், சுயேச்சை வேட்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1980-ம் ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் பாரம்பரியமாகப் போட்டியிட்டு வென்ற ராமநாதபுரம் தொகுதியில் பின்னர், அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி நிலவி வந்துள்ளது. ஓரிரு முறை கூட்டணி பலத்துடன் காங்கிரஸும், தமாகாவும் வென்றுள்ளன.
2021இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருச்சுழி ஆகிய தொகுதிகளை திமுகவும், திருவாடானை, அறந்தாங்கி தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் வென்றன. இங்கு, ஒரு தொகுதியைக்கூட அதிமுக, பாஜக கூட்டணி கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 4,69,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 1,27,122 வாக்குகள் கூடுதலாக பெற்று நவாஸ் கனி வெற்றி வாகை சூடினார்.
மேலும், அமமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகன் ஆனந்த் 1,41,806 வாக்குகள் பெற்றார். இது, நயினார் நாகேந்திரனின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்தது எனலாம். கடந்த தேர்தலில், நாம் தமிழர் வேட்பாளர் புவனேஸ்வரி 46,385 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜய பாஸ்கர் 14,925 வாக்குகளும் பெற்றனர்.
2024இல் ராமநாதபுரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,06,014
ஆண் வாக்காளர்கள்: 7,96,989
பெண் வாக்காளர்கள்: 8,08,942
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 83
தற்போதைய தேர்தலில், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டி இடுவதால், இந்த தொகுதி மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. அவரை எதிர்த்து, திமுக கூட்டணியில், முஸ்லீம் லீக் சார்பில், தற்போதைய எம்பி நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார். எடப்பாடி தலைமையிலான அதிமுக சார்பில், ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சியில் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 25 பேர் களத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் என்றாலே வறட்சி மாவட்டம் என்று கூறுமளவுக்கு இத்தொகுதியில் நிலவும் வறண்ட நிலை காரணமாகக் குடிநீர் பிரச்சினை காலங்காலமாக உள்ளது. இதனால், பலர் வேலை தேடி வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் அவலம் உள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டில் திமுக அரசால் ரூ. 616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தும், அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் தற்போது வரை குடிநீர் பிரச்சினை தொடருகிறது. தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படி தொழிற்சாலை இல்லை. இதெல்லாம் தற்போதைய எம்.பி. நவாஸ்கனி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தொகுதி மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்பி நவாஸ் கனியை பெரும்பாலும் பார்த்ததில்லை என்று வருத்தப்படுகின்றனர்.
மீனவர்கள் கைது என்பது, இங்கு நிலவும் மற்றொரு பிரச்சனை. இந்தியா – இலங்கை மீனவர்களும் சுமூகமாக மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதும் இங்குள்ள தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசியலில் தனித்துவிடப்பட்டு, அதிமுக கட்சி, கொடி என எல்லாவற்றையும் பறிகொடுத்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கடைசியாக பாஜக அணி சார்பில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரது சின்னம் பலாப்பழம்.
இந்த தொகுதியில் குற்றம் குற்றமே நடத்திய கள ஆய்வில் அவருக்கும் நவாஸ் கனிக்கும் இடையேதான் போட்டி என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஓபிஎஸ் வெளியூரை சேர்ந்தவர் என்றாலும் ராமநாதபுரம் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. அவரது தேர்தல் பிரசாரங்களில் மக்கள் அதிகளவு வருவதை காண முடிகிறது.

கடந்த முறை தனித்து நின்ற பாஜக, அமமுக இம்முறை சேர்ந்து களமிறங்கி உள்ளன. சாதிவாரி வாக்குகளும் ஓபிஎஸ்க்கு கிடைக்கும் என்பதோடு, சிட்டிங் எம்.பி. மீதான அதிருப்தியும் அவருக்கு சாதகமாக உள்ளது. எனினும், சிஏஏ சட்டம் உள்ளிட்டவற்றால் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் நிச்சயம் வாக்கு கிடைக்காது என்பது, ஓபிஎஸ் தரப்புக்கு உள்ள மைனஸ் என்றே சொல்லலாம். ஒருவேளை முன்னாள் முதல்வர், அதிமுகவில் இருந்து விலக்கபட்டவர் என்ற அனுதாபம் அவருக்கு கைகொடுக்கலாம்.
தனது அரசியல் எதிர்காலத்துக்கு இந்த தேர்தல் முக்கியமானது என்பதால் ஓபிஎஸ் வாக்குகளை பெறுவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், இந்த தொகுதியில் தான் வெற்றி பெறாவிட்டாலும் கூட, ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெறக்கூடாது என்ற முனைப்புடன் எடப்பாடியின் அதிமுக கங்கணம் கட்டி வேலை பார்க்கிறது. இதனால், பல டுபிளிகேட் ஓ.பி.எஸ்.களை களமிறக்கி அவருக்கு குடைச்சலை தந்து வருகிறது.
ஒ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் பட்டாணி, வாளி, திராட்சை, கண்ணாடி கிளாஸ், கரும்பு விவசாயி ஆகிய தனி சின்னங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதிருப்திகள் இருந்தாலும் கூட ஓபிஎஸ்-க்கு நவாஸ்கனி கடும் போட்டியை தருகிறார்.
திமுகவில் உள்கட்சி பூசல் உள்ளது. அதிருப்தியில் உள்ள ராஜகண்ணப்பன், உள்ளடி வேலைகள் செய்தால் கூட்டணி கட்சியான நவாஸ் கனியை அது பாதிக்கும். எனினும், பல ஓபிஎஸ்-கள் களமிறங்கி ஏற்படுத்தும் குழப்பம், கடந்த முறை அமமுகவில் போட்டியிட்டு இம்முறை திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள வ.து.நடராஜனின் மகன் ஆனந்த், திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக பிரிப்பது போன்றவை சிட்டிங் எம்.பி. நவாஸ் கனிக்கே களத்தை சாதகமாக்கி இருக்கிறது.
இதனால், கடுமையாக உழைத்த போதும் கூட்டணி கட்சியான பாஜகவினரின் அயராத பணிகள் இருந்த போதும் ஓபிஎஸ் கரை சேருவது அதிசயமாகத் தான் இருக்கும் என்பது நமது கணிப்பில் தெரியவந்துள்ளது. கடைசி நேரத்தில் வாக்காளர்கள் மனம் மாறினால் மட்டுமே ஓபிஎஸ் கரை சேருவார் என்பதால், முன்னாள் ஓபிஎஸ்-இன் பலாப்பழத்தைவிட நவாஸ் கனிக்கே ராமநாதபுரத்தில் வெற்றி வாய்ப்பு என்பது தற்போதைய கள நிலவரமாகும். வழக்கம் போல் ஓபிஎஸ்-க்கு அதிர்ஷ்டம் இருக்காது என்பது கண்கூடாகத் தெரிகிறது.





