தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பிற மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணைப்பகுதியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.







