டியூப்லைட் என பிரதமர் மோடி விமர்சித்ததற்கு ராகுல் கருத்து
பிரதமர் பதவிக்கான ஒரு மேன்மையான தகுதி இருப்பதாகவும் ஆனால் அதற்கு ஏற்ப நரேந்திர மோடி நடந்து கொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் ராகுல் காந்தியை பிரதமர் மோடி டியூப்லைட் என மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
அது குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி இவ்வாறு பதிலளித்தார். முன்னதாக ஆறு மாதம் கழித்து நாட்டின் இளைஞர்கள் பிரதமர் மோடியை தடியால் அடிப்பார்கள் என ராகுல் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மக்களவையில் பேசினார். அப்போது விருதுநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றார்.
உடனே அவரை பாரதிய ஜனதா எம்பி ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ்வர்தன் காங்கிரஸ் அமைச்சர்கள் தன்னை தாக்க முயன்றதாகவும் தன் கையிலிருந்த தாள்களைப் பறித்ததாகவும் குற்றம்சாட்டினார்.






