“புதுச்சேரியில் இன்று இரவு முதல் ஊரடங்கு!!” மதுக்கடைகளும் அடைப்பு..! என்ன அறிவுறுத்தினாலும் அலட்சியம் காட்டுவதாக முதல்வர் நாராயணசாமி கோபம்!!
புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் மூடப்படும் என்றும் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதில் வெளிநாட்டினரும் அதிகம். கொரானோ அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை அம்மாநில முதல்வர் நாராயணசாமி பிறப்பித்து வருகிறார். தற்போது புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புதுச்சேரி எல்லைக்குள் யாரும் வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்தக் கட்டுப்பாடுகளை யாரும் பதிப்பதாக தெரியவில்லை; அலட்சியப்படுத்துகிறார்கள் என அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ள முதல்வர் நாராயணசாமி இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6 மணியுடன் அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் அனைத்தையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரானோ காரணமாக தங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினால், புதுச்சேரி மக்கள் அலட்சியமாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் புதுச்சேரி மக்கள் இப்படி அலட்சியமாக இருப்பதால் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால், புதுச்சேரியில் தொழிற்சாலை, பெரிய நிறுவனங்களை இன்று மாலை 5 மணி முதல் மூட வேண்டும். ஆன்லைன் உணவு விநியோகமும் தடை செய்யப்படுகிறது. உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும், புதுச்சேரியில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்லவும் அரசு தடை விதிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். பொதுமக்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.






