சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு..! ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!!
சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நரம்பியல் மருத்துவரின் உடலை தங்கள் பகுதி மயானத்தில் அடக்கம் செய்ய பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். கற்களை வீசி, உருட்டுக்கட்டைகளால் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வேன் சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னையில் இதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 50 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 3 மருத்துவர்கள், 2 காவல்துறையினர், செய்தியாளர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதியானது.
இந்நிலையில், சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் இயக்குநராக இருக்கும் மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை உயிரிழந்தார்.கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வரும்
நரம்பியல் நிபுணரான அவரின் உயிரிழப்பு, கொரோனாவுக்கு தமிழகத்தின் முதல் மருத்துவர் உயிரிழக்கும் சம்பவமாக அமைந்தது.

இந்த நிலையில், உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் அருகிலுள்ள வேலங்காடு மயானத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அப்பகுதியினர் கூட்டமாக திரண்டு மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து திடீரென ஆம்புலன்ஸை முற்றுகையிட்டனர். அப்போது கூட்டத்தினர்
கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையாலும் தாக்கத் தொடங்கினர்.
இதில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தன.மேலும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்கள் இருவரும் காயமடைந்தனர். இதனால் வேலங்காடு மயானம் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.அப்போது சொற்ப அளவிலேயே போலீசார் இருந்ததால் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாளிக்க திணறினர்.இதையடுத்து, கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பின்னர் காவல்துறை பாதுகாப்போடு மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த வாரம் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தனியார் மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் மற்றும் திருவேற்காடு மயானங்களில் எதிர்ப்பு எழுந்ததால் அவருடைய உடல் நெல்லூருக்கே கொண்டு செல்லப்பட்ட சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.







