சிஏஏக்கு எதிராக இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பொதுக் கூட்டம்..! தீர்மானங்களும் நிறைவேற்றம்!!
இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் , தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்திற்கு இராமநாதபுரம் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முஹமது பஷீர் தலைமை தாங்கினார் . இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆரிஃப்கான், மாவட்டப் பொருளாளர் ரஹ்மான் அலி , மாவட்டத்துணைச் செயலாளர்கள் யாசர் அரஃபாத் , மன்சூர் அலி , சுல்த்தான் , சகுபான் அலி முன்னிலை வகித்தனர்.

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம் என்ற தலைப்பில் மாவட்டத் துணை செயலர் மன்சூர் அலி, எங்கள் நாடு எங்கள் உரிமை என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் நெல்லை ஃபைசல் ஆகியோர் பேசினார். மாவட்டத் துணைச் செயலர் சகுபான் அலி தீர்மானங்கள் வாசித்தார்.அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்ற தலைப்பில்
மாநிலப் பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா
உரையாற்றினார் . மாவட்டச் செயலாளர் ஆரிஃப்கான் நன்றி கூறினார் .
இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்திய மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாகதிரும்பப் பெற வேண்டும்.
கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல , புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாநில மக்களின் குடியுரிமையை காத்த புதுவை மாநில முதல்வர் நாராயணசாமிக்கு இக்கண்டனப் பொது கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அறவழியில் போராடிய டெல்லி ஜாமி ஆ பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சங் பரிவார அமைப்பை இந்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல தமிழகத்திலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வன்முறையாக பேசிவரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





