விண்ணில் ஏவப்பட்டது PSLV C61 ராக்கெட்..!
இஸ்ரோவின் 101வது ராக்கெட் என்ற பெருமையோடு இன்று விண்ணில் பாய்ந்தது PSLV C61. தேசிய பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, வானிலை பயன்பாடு, காடுகள் கண்காணிப்பு, விவசாயம், நகர திட்டமிடல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக PSLV C61 ராக்கெட்டில் EOS-09 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் ISROவின் RISAT-1 பாரம்பரிய இன்ஜினை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலை நிலைகளிலும் பல்வேறு பூமி கண்காணிப்பு பயன்பாடுகளுக்கான படங்களை வழங்கும் திறன் கொண்ட ஒரு செயற்கை துளை ரேடார் (SAR) பேலோடைக் கொண்டுள்ளது.இந்த நிலையில், இந்த PSLV C61 இன்று காலை 5.59 மணிக்கு, ஸ்ரீஹரி கோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
புயல் போன்ற காலங்களில் வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்காணிக்க புகைப்பட ஆதாரங்களை இந்த செயற்கைக்கோள் அனுப்பவுள்ளது. மேலும் ராணுவ பயன்பாட்டின் எல்லைப் பாதுகாப்பில் இதுபோன்ற செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தீவிரவாதிகளின் ஊடுருவலை அடையாளம் காணவும் இந்த செயற்கைக்கோள் உதவுகிறது.
சுமார் 1,696.24 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோளை பூமியிலிருந்து 534 கிலோ மீட்டர் உயரே சென்று சூரிய வட்டப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு படிப்படியாக தூரம் குறைக்கப்பட்டு 351 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ளது.பூமி பார்வை செயற்கைக்கோள்-09 (EOS-09) என்பது 2022ஆம் ஆண்டு ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட EOS-04 செயற்கைக்கோளின் அப்டேட் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.





