கல்வி கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் பெற்றோரை வலியுறுத்தக்கூடாது..!
தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் அதே நேரம் பெற்றோர் தாமாக விருப்பப்பட்டு கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களில் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் அதே சமயம் பெற்றோர் தாமாக விருப்பப்பட்டு கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணம் தெரிவித்தார்.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கான 248 கோடியே 76 லட்சம் ரூபாய் தொகை ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டு இருப்பதால் அந்த தொகையைப் பயன்படுத்தி மூன்று, நான்கு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து இது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






