2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி..!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். மதுரையில் இன்று நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.நேற்றிரவு 8.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனையடுத்து, கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர் மோடி, இன்று புதுச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்கிறார். லாஸ்பேட்டையில் 1,572 கோடி ரூபாய்க்கு 74 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், ஆரோவில்லில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து மதுரைக்கு செல்லும் அவர், பல்வேறு ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கிறார். மாலை 4.30 மணிக்கு மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.





