திடீர் நெஞ்சுவலியால் அவதி… ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி அனுமதி!
நெஞ்சுவலி காரணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு (வயது 75), நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ராணுவ மருத்துவமனையில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நெஞ்சில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவரின் மகனை போனில் தொடர்பு கொண்டு பேசினார். குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உடல்நலம் பெற வேண்டிகொள்வதாக பிரதமர் மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரிவித்து உள்ளது.





